சென்ற கட்டுரையில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தன்மையுண்டு என்பதையும், உளவியலில் அடிப்படை நிறங்கள் பதினொன்று எனவும், அவற்றுள் பச்சை, சிவப்பு, ஊதா, நீலம், ஆரஞ்சு மற்றும் மஞ்சளின் குணங்களையும் கண்டோம். அதன் தொடர்ச்சியாக மற்ற ஐந்து நிறங்களான கறுப்பு, வெண்மை, இளஞ்சிவப்பு (ரோஜா நிறம்), பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தின் தன்மைகளை இங்கு காணலாம்.
காதல் ரோஜாவே: அன்பு, அரவணைப்பு, காதல், பெண்மை, மென்மை ஆகியவற்றினைக் குறிக்கும் கதகதப்பான வண்ணம் ரோஜா நிறமாகும். இது சிவப்பில் இருந்து உருவான, சிவப்பின் அடிப்படையிலான நிறமே. ஆனாலும் சிவப்பு உணர்வுகளைத் தூண்டுவதற்கு உதவுவது, இந்நிறமோ உணர்வுகளை வருடிக்கொடுத்து இதமான ஒரு உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. இது பெண்மையையும், உயிர்களின் வாழும் தன்மையையும் குறிக்கிறது.
இந்நிறம் அரவணைப்பான, இதமான உணர்வையும் உண்டாக்குகிறது. காதல் உணர்வைத் தூண்டுகிறது. எனவேதான், இவ்வண்ணத்தைப் படுக்கையறையில் பயன்படுத்துமாறு உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.உலகில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெண்களின் மிக விருப்பமான வண்ணமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இதன் குறைபாடு என்னவெனில் அதிக அளவு இளஞ்சிவப்புவண்ணம் பயன்படுத்தப் படுமாயின் அது மனச் சோர்வையும், பலவீனமான உணர்வையும் உருவாக்குவதோடு, நம் ஆற்றலை, திறனைக் குறைத்துவிடக் கூடியது.
கறுப்பே அழகு: அனைத்து வண்ணங்களையும் தன்னுள் அடக்கிய வண்ணம் இது. இவ்வண்ணம் பலராலும் விரும்பப்படுவது. இவ்வண்ணத்தை சிலர் தீயசக்திகளின் வண்ணம் என்று குறிப்பிட்டாலும் இவ்வண்ணம், திறமை, அறிவுஜீவித்தனம், கவர்ச்சி, நம்பகத்தன்மை, பாதுகாப்புணர்வு முதலியவற்றினை உணர்த்தக்கூடிய வண்ணம் என்று கருதப்படுகிறது. இது உளவியலில் ஏராளமான தாக்கங்களை உருவாக்கக்கூடிய வண்ணம். இது அடர்த்தியான வண்ணம் என்பதாலும் ஒளியற்றது என்பதாலும் நிறங்களுக்கான அலைவரிசையினை உள்வாங்கிக்கொள்ளுமே(absorb) தவிர எதிரொளிப்பதில்லை. இதனால் இந்நிறம் பூசப்பட்ட பொருட்கள் இயல்பான எடையை விட மிகவும் அதிக எடை உடையனவாகத் தோற்றமளிக்கின்றன. இது நம்மை நோக்கி வரும் ஆற்றலை உள்வாங்கிக் கொண்டுவிடக் கூடியது. எனவே சிலர் இவ்வண்ணத்தினை அச்சுறுத்தக்கூடிய வண்ணம் என்று கருதி புறக்கணிப்பதும் உண்டு.
கறுப்பின் நேர்மறைக் குணங்கள் என்பது இதன் அழகு மற்றும் தெளிவைக்குறிக்கும் தன்மையாகும். மேலும் இந்த நிறம் சமரசம் செய்துகொள்ளாத தரத்தையும் மேன்மையான பண்பையும் தெரிவிக்கக் கூடியது. எதிர்மறையாக கருமை அதிக பருமனான, கடுமையான தோற்றத்தைத் தரக்கூடியது.
கள்ளமில்லா வெள்ளை: கருமைக்கு நேர் எதிரான தன்மையினை உடைய நிறம் வெண்மை. கருமை எவ்வாறு எல்லா ஒளியையும் உள்வாங்கிவிடுகிறதோ அதற்கு எதிராக வெண்மை எல்லா நிறத்தையும் எதிரொளிக்கிறது (Reflect). இது தூய்மை, சுகாதாரம், சுத்தம், தெளிவு, எளிமை,அமைதி இவற்றைக் குறிப்பதோடு, கருமை நிறத்தைப் போலவே , மேன்மையான குணங்களையும், நளினத்தையும், தரம் மற்றும் திறமையையும் உணர்த்துகிறது. ஆயினும் இது தடையையும், தொடாதே என்ற எச்சரிக்கையையும் குறிப்பதாக உளவியலாளர்கள் கருதுகின்றனர். வெண்மை நிறம் உயரத்தை அதிகரிப்பது போன்ற ஒரு பிரமையினைத் தோற்றுவிக்கிறது. மேலும் வெண்மையானது மற்ற வண்ணங்களுடன் சேர்கையில் ஒரு மின்னும் தோற்றத்தையும் உண்டாக்கிவிடுகிறது. இதனால் வெண்மையுடன் பிற நிறங்களை இணைக்கையில் இது மற்ற நிறங்களை மங்கலாக்கி விடக்கூடியது என்பது இதன் ஒரு குறைபாடாகக் கருதப்படுகிறது.
சோம்பல் தரும் சாம்பல் நிறம்: எந்த ஒரு நேரடியான உளவியல் தன்மையும் இல்லாத ஒரே நிறம் சாம்பல் நிறம் என்று கருதப்படுகிறது. எனினும், நிறங்களுக்கான எத்தகைய தன்மையுமே இல்லாததனாலேயே இந்நிறம் ஒரு வித அழுத்தத்தை உண்டாக்கி, சோம்பலான மன நிலையையும், மனச்சோர்வினையும் தோற்றுவிக்கக் கூடியதாக ஆகிவிடுகிறது. மேலும் இந்நிறம் ஆரஞ்சு நிறத்திற்கு எதிரான தன்மையை, அதாவது தூங்கவேண்டும் போல் ஒரு சோம்பலான மனநிலையினையும், கசகசப்பான உணர்வினையும் உண்டாக்கிவிடக்கூடியது. மேலும் அதிகப்படியான சாம்பல் வண்ணத்தின் பயன்பாடு, தன்னம்பிக்கை இன்மை மற்றும் வெளிப்படையாகப் பழகுவதில் அச்சம் ஆகியவற்றின் குறியீடும் ஆகும்.
சிரிப்பை உணர்த்தாத பழுப்பு : பழுப்பு நிறம் கடுமை, அழகின்மை, பண்பற்ற குணம் முதலிய குணங்களைக் காட்டும் நிறம் எனக் கருதப் படுகிறது. மேலும் இது, இயற்கை, நம்பகத்தன்மை இவற்றின் குறியீடாகக் கருதப்படும் வண்ணம் ஆகும். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரண்டு வண்ணங்களும் அதிக அளவு கறுப்பும் சேர்ந்து உருவாகும் இந்நிறம், கறுப்பிற்கு எதிரான குண நலங்களைக் கொண்டது. மென்மையையும் கதகதப்பான உணர்வையும் தோற்றுவிக்கும் இவ்வண்ணம், மஞ்சள் மற்றும் சிவப்பின் தன்மைகளையும் கொஞ்சம் ஒத்துள்ளது. இது இயற்கையையும், புவியியலையும் சுட்டும் நிறம் ஆகும். இது திடமான, நம்பகத்தன்மை மிக்க எண்ணங்களை உண்டாக்க வல்லது. பெரும்பான்மையான மக்கள், கறுப்பை விட பழுப்பை ஆதரவான (Supportive) உணர்வைத் தோற்றுவிப்பதாகவும், அடக்குகின்ற அல்லது மறைக்கின்ற (suppressive) குணத்தையுடைய கருமைக்கு மாற்றான வண்ணம் என உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வீட்டின் அறைகளுக்குப் பயன்படுத்தவேண்டிய வண்ணங்கள்:
சிவப்பு தூண்டுதலையும் உற்சாகத்தையும் உண்டாக்கும் வண்ணம் ஆதலால், இதனை சமையலறைக்கும், குளியலறைக்கும் பயன்படுத்துவது நல்லது. மிகவும் குறுகிய அறைகள், வரவேற்பறைகளுக்கு மஞ்சள் நிறம் பொருந்தும். இது இதமான வரவேற்புணர்வைக் காட்டக்கூடியது, மேலும் விசாலமாகத் தோற்றமளிக்கச் செய்யும் தன்மையுடையது. ஆயினும் முழுக்க முழுக்க மஞ்சள் நிறத்தை மட்டும் பயன்படுத்துவது சரியல்ல என்பது நிபுணர்கள் கருத்து. முழுக்க மஞ்சள் நிறமான அறை அங்கு புழங்குபவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு, தமது கட்டுப்பாட்டை இழக்கச் செய்ய வல்லது.
இதமான உணர்வைத் தோற்றுவிக்கக் கூடியது, இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வல்லது என்பதால் படுக்கை அறைக்கும், பெரிய சமையலறைகள், குடும்பத்தினர் கூடிப் பழகும் அறைகள் இவற்றுக்கு நீல நிறம் குறிப்பாக இளநீலம் பரிந்துரைக்கப் படுகிறது. ஆனால் இயற்கை வெளிச்சம் ஊடுருவாத அறைகளில் இவ்வண்ணச் சுவர்கள், இதமற்ற உணர்வை உண்டாக்கக் கூடும். மாற்றாக இள ஊதா (Lavender or Lilac) நிறத்தை இத்தகைய அறைகளில் பயன்படுத்துவதால் அதே விளைவு ஏற்படும்(Similar Effect).
புத்துணர்வளிக்கும் நீலத்தின் தன்மையையும், மகிழ்வினை ஊட்டக்கூடிய மஞ்சளின் தன்மையையும் ஒருங்கே பெற்ற நிறம் பச்சை. இது கூடங்கள் மற்றும் வரவேற்பறைகளில் பயன்படுத்தப் படுகையில், வெளிப்படையாகப் பேசும் தன்மையையும் புரிந்துணர்வையும் ஊக்குவிக்கிறது. ஒருமித்த எண்ணங்களை ஏற்படுத்த வல்லது இந்த நிறம். சாப்பாட்டு அறையில் நீலம் அல்லது பச்சையைப் பயன்படுத்தினால் உணவு அருந்திய திருப்தியை விரைவில் உண்டாக்கும் எனவும் அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தினைக் கட்டுப்படுத்தும் எனவும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வெண்மை நிறம் பூசப்பட்ட அறைகள் பெரியதாகவும் பளிச்சென்றும் தோற்றமளிக்கக் கூடியன எனினும் இவை பொதுப்படையானவை. எந்த உணர்வையும் தூண்டுவதில்லை. ஆனால், அறையின் வண்ணம் எதுவாக இருப்பினும், மேற்கூரைகளை வெண்மையாகவே வையுங்கள். இது அறை உயரமாக இருப்பது போல் தோற்றத்தைத் தரும். மேலும் வெண்மையான மேற்கூரை நம்பகமான உணர்வையும் உண்டாக்குகிறது.
உடற்பயிற்சி அல்லது விளையாட்டு தொடர்பான அறைகளில் மட்டுமே ஆரஞ்சு வண்ணத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல் படுக்கையறைகளுக்கு இளஞ்சிவப்பு வண்ணத்தைப் பயன்படுத்துவது, குடும்பத்தினரிடையே, சொல்லப் போனால் கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
(Source:- http://eelanation.com)
Saturday, October 24, 2009
நிறங்களும் அவற்றின் குணங்களும் !
உலகம் வண்ணமயமானது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாவற்றிலும் ஏராளமான வண்ணங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு குணமுண்டு. வெண்மை தூய்மையையும், சிவப்பு தடையையும் உணர்த்துவது இயல்பு. இவ்வாறே ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு தன்மையை உடையது. பொதுவாக அடிப்படை நிறம் என்பது நீலம், மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்றே. வெண்மை மற்றும் கருமை நிறத்தைத் தனியாகவே குறிப்பிடுகின்றனர். மற்ற வண்ணங்கள் அனைத்தும் இவற்றின் கலப்பினாலேயே உண்டாகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் நம் வாழ்வில் ஒரு பங்கு உள்ளது.
உளவியலில்(Psycology) நிறங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.இந்த வண்ணங்கள் நமது எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை என்பதும் ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்கள் குணத்தையும் கணிக்க இயலும் என்பதும் உளவியலாளர்களின் கருத்து. உளவியலில், சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சளை அடிப்படை நிறங்கள் (Basic Colours) என்று சொல்லப்படுகிறது. நம் மீது தாக்கத்தை உண்டாக்கக்கூடிய நிறங்களாக அடிப்படை நிறங்களான மேற்கூறிய சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் இவற்றுடன் வெண்மை, கருமை, சாம்பல் நிறம்(Grey), ஆரஞ்சு, ஊதா(Violet), இளஞ்சிவப்பு (Pink) மற்றும் பழுப்பு(Brown) நிறங்கள் குறிப்பிடப்படுகின்றன.
பச்சை நிறமே பச்சை நிறமே: பசுமை நிறம் பொதுவாக சமநிலையையும் சூழலில் அமைதி நிலவுவதையும் குறிக்கிறது. பச்சை நிறத்தினைப் பார்க்கும்பொழுது நமது மனம் புத்துணர்ச்சி அடைகிறது. கண்களில் உள்ள லென்ஸ் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிறத்தின் அலைவரிசைக்கும் ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்(Adjustment) கொள்ளுகிறது. ஆனால், பச்சை நிறத்திற்கு அப்படிப்பட்ட தகவமைப்பு ஏதும் தேவையில்லை. வான வில்லின் நடுவில் அமைந்துள்ள இந்நிறமானது சமநிலையைச் சுட்டுகிறது. ஓய்வு நிலையையும் செழிப்பையும் குறிக்கவும் பச்சை பயன்படுகிறது.
நீல நிறம், வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் : குளிர்ந்த நிறமாகக் கருதப்படும் நீலம், அறிவுத்திறனையும், நம்பிக்கையையும்,திறமையான தர்க்க ரீதியான செயல் பாட்டையும் குறிப்பிடுகிறது. நீல நிறம் மனதிற்கு இதமளிக்கக் கூடியதாகக் கருதப் படுகிறது. ஆழ்ந்த நீல நிறம், எண்ண ஓட்டங்களைச் சீராக்கி சிந்திக்கும் திறனை உயர்த்துகிறது. இள நீலமானது, மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்துகிறது. அதிக அலை நீளமுள்ள நிறமாதலால், தொலைவில் உள்ள நீல நிறப்பொருட்கள் நம் கண்ணில் படுவதில்லை. இதனால்தான் போக்குவரத்து விளக்குகள் நீல நிறத்தைப் பயன்படுத்துவதில்லை. அதே அதிக அலை நீளம்தான், வானத்தை நீல நிறமாகத் தோன்றச் செய்யவும் காரணம். உலக முழுவதும் அதிக அளவிலான மக்கள் நீல நிறத்தை விரும்புவதாக ஆய்வுகள் கணிக்கின்றன.
வலிமையின் நிறம் சிவப்பு: வறுமையின் நிறம் சிவப்பா என்று நமக்குத் தெரியாது. ஆனால் வலிமையின் நிறம் சிவப்புதான். ஆம், சிவப்பு வலிமையையும் துணிச்சலையும் ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றையும் குறிக்கும் நிறமாகக் கருதப்படுகிறது. தூண்டுதலை உண்டாக்குகிறது. ஒரு அறையில் உள்ள பொருட்களில் சிவப்பு வண்ணப் பொருள்தான் நமது கவனத்தினை முதலில் ஈர்க்கிறது. எனவேதான் போக்குவரத்து சைகைகள், அபாய எச்சரிக்கைகள் முதலியவை சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றன. 'செய் அல்லது செத்து மடி' என்ற உணர்வை உண்டாக்குவதும், நேரம் வேகமாக ஓடுவது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதும் சிவப்பின் பிற தன்மைகள்.
மஞ்சள் மகிமை: மஞ்சள் உணர்வு பூர்வமான நிறம். தன்னம்பிக்கை, ஆக்க பூர்வ சிந்தனைகள், நட்புணர்வு, நேர்மறைச் சிந்தனை ஆகியவற்றின் குறியீடாகக் கருதப்படுகிறது. சிவப்பு நிறம் போலவே வலிமையையும் உணர்வுகளின் தூண்டுதலையும் கூட்டுவது மஞ்சளின் தன்மை. உத்வேகத்தை அதிகரிப்பதோடு நேர்மறை உணர்வுகளை ஏற்படுத்த வல்லது. ஆனால் அளவுக்கதிகமான மஞ்சள் நிறம் அல்லது தவறான வண்ணங்களுடன் மஞ்சளின் இணைப்பு எதிரான பலனைத் தரக்கூடியது. அது நமது சுய மதிப்பைக் (Self Esteem) குறைக்கின்ற அல்லது பதட்டத்தையும் பயத்தையும் உண்டாக்கும் காரணியாகிவிடுகிறது.
ஆழமான ஊதாவே: ஆன்மீக உணர்வுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்நிறம் நிறைவு, சொகுசு , தரம் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் விளங்குகிறது. ஊதா நிறம் ஆழ்நிலை தியானத்திற்கு உதவுகிறது. ஆன்மீக உணர்வைத் தூண்டக்கூடிய இந்நிறம் சீரான சிந்தனையையும், ஆழ்ந்த எண்ணங்களையும் ஊக்குவிக்கிறது.வானவில்லின் புறத்தில் கடைசியாக இருக்கும் நிறமாதலால், காலம்(Time), வெளி(Space)மற்றும் பிரபஞ்சம் (Cosmos) இவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அதே சமயம் அதிகப்படியான ஊதாநிறப் பயன்பாடு தாழ்வு மனப்பான்மை, அழுத்தம், வெளிப்படையாகப் பேசாமை (Introvert) போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியது. அதே போல் சரியான வண்ணக்கலவையாக இல்லாவிடில் அது அருவருக்கத் தக்கதாகத் தோற்றமளிக்கிறது.
ஆர்வம் தரும் ஆரஞ்சு: செயல்பாட்டைத் தூண்டக் கூடிய வண்ணம் ஆரஞ்சு. வளமை, பாதுகாப்பு, ஆர்வம், கதகதப்பு, வேடிக்கை ஆகியவற்றின் குறியீடு எனவும் ஆரஞ்சு வண்ணம் கருதப்படுகிறது. சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தின் கலவையால் ஆரஞ்சு உருவாவதால், செயல் திறன், உணர்வுகள் இரண்டையும் தூண்டும் தன்மையுடையதாக உள்ளது இந்த வண்ணம். மனம் மிகுந்த சோர்வாக இருக்கும்பொழுது ஆரஞ்சு வண்ண உடை அணிவதால், மனச்சோர்வில் இருந்து விடுபட இயலும். அதே நேரம், இவ்வண்ணத்தை கறுப்புடன் சேர்த்துப் பயன் படுத்துகையில் இது எதையோ இழந்தது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதாக மாறிவிடுகிறது. மேலும் அதிகப் படியான ஆரஞ்சு வண்ணம், அறிவீனத்தைக் (நீலத்திற்கு எதிரான தன்மை) காட்டுகிறது.
இளஞ்சிவப்பு, வெண்மை, கருமை, பழுப்பு மற்றும் சாம்பல் நிறம் ஆகிய நிறங்களின் தன்மை, மனிதர்களின் உணர்வில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள், உளவியல் மருத்துவத்தில் நிறங்கள் என்ன பங்கினை வகிக்கின்றன முதலியவை குறித்து, தொடர்ந்து விரிவாகக் காண்போம்.
(Source:- http://eelanation.com/)

Subscribe to:
Posts (Atom)