Tuesday, November 24, 2009

உங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?

எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது.
எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் "அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் " என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளிச்சு நிண்டே கேட்கும்?”  என்று திருப்பிக் கேட்டிருக்கிறேன். ஆனால் எல்லாமே எங்களுடைய மனம்தான் என்று இப்போது தெரிகிறது.
உண்மையில் இந்தப்பிள்ளைகள் இப்படி ஓராளை ஓராள் அடிச்சுக்கொண்டு சாகிற அளவுக்கு நடந்துகொள்றதுக்கு அவர்களின் பெற்றோரும் ஒருவகையில் காரணம்தான்.

பிறந்ததிலிருந்தே எங்களுடைய மனதில் விதைக்கப்படும் எண்ணங்களே நாங்கள் வளர்ந்து எப்படிப்பட்ட மனிதராக உருவாகிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. ‘என்ர பிள்ளை கெட்டிக்காரி, அவளால் நன்றாகப் படிக்கமுடியும் , அவள் வளர்ந்து தனக்குப் பிடித்த ஒரு துறையில் மிளிர்வாள்’ என்று தாயொருத்தி மற்றவர்களிடம் சொல்வதை அந்தப்பிள்ளை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தப்பிள்ளை பிற்காலத்தில் ஏதோ ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஒருவர் எங்களைப் பற்றி நல்ல விதமாகக் கதைக்கும்பொழுது அது எங்களின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கச் செய்கின்றது.
இந்தச் சுயமதிப்பீடு அல்லது சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள காலமெடுக்கும். ‘நான் என்னைச் சுற்றி இருப்பவர்களால் நேசிக்கப்படுகிறேன், எனக்கென்று சில சிறந்த குணங்களுள்ளன, என்னால் முடியும், என்னால் மற்றவர்களுக்கும் உதவ முடியும்’ போன்ற எண்ணங்கள்தாம் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு தொடர்ந்து உயிர்வாழும் ஆசையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன.

self-confident-childசுயமதிப்பை வளர்த்துக்கொள்ளும் எண்ணங்கள் உருவாகும் வகையில் குழந்தைகளை வளர்க்கும் கடமை பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் தான் அதிகம் அடங்கியிருக்கிறது. அவர்கள் அந்தக் கடமையைச் செய்யத் தவறுகையில் அந்தப் பணி நண்பர்களுடையதாய் அமைகிறது. அம்மா அப்பாவிடம் சரி சமமாகக் கதைக்கப் பழக்க வேண்டும்; எதையும் மனம் திறந்து பெற்றோருடன் உரையாடக் கூடிய இடத்தை வழங்க வேண்டும்; ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.

சில குடும்பங்களில் என்ன நடக்கிறது? பாடசாலையில் குடியமர்வு ஆலோசகராக பணிபுரியும் ஒருவருடன் அண்மையில் உரையாடும்போது அவர் சொன்னார், ‘உண்மையில் இந்தப்பிள்ளைகள் இப்படி ஓராளை ஓராள் அடிச்சுக்கொண்டு சாகிற அளவுக்கு நடந்துகொள்றதுக்கு அவர்களின் பெற்றோரும் ஒருவகையில் காரணம்தான்.’ வெளிநாடுகளில் ஆசிரியர்கள் "என்னைப் பார் , என் கண்ணைப் பார்த்துப் பேசு "என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சில வீடுகளில் "என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிற அளவுக்கு நீ வளந்திட்டியோ " என்று சொல்லி பிள்ளைகளை அடிக்கிறார்கள். அப்போ அந்த பிள்ளை ஆசிரியர் சொல்வதைக் கேட்பதா, பெற்றோர்  சொல்வதைக் கேக்கிறதா? ஆசிரியர் கேள்வி கேட்கும்போதெல்லாம் அந்த மாணவன் தலை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை, குனிந்துகொண்டே பதில் சொல்வான். இது தொடர்பாக அந்த குடியமர்வு ஆலோசகர் அவனுடைய தந்தையிடம் பேசும்பொழுது அவர் சொன்னாராம் "நான் என்ர அப்பாவை இதுவரைக்கும் நிமிர்ந்து பார்த்துக் கதைத்ததில்லை. ஆனால் இவன் இப்பவே என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிறான். அப்ப இவனை அடிக்காமல் என்ன செய்றது?"
பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு சுயமதிப்பீடு , வெறுப்பு , குழப்பம் , விரக்தி போன்றவற்றோடுதான் வாழ்கிறார்கள்.
உன்னையறிந்தால் – நீ
உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை
வணங்காமல் நீ வாழலாம்.
பிள்ளைகளிடம் தன்னம்பிக்கையை high_self-esteemவளர்த்து அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை அதில் மேலும் ஈடுபடச்செய்து அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை வீட்டுக்கும் நாட்டுக்கு நல்லவர்களாக உருவாக்க வேண்டும். ஆனால் சில பெற்றோர் என்ன செய்கிறார்கள்? பிள்ளைக்கு ஒரு விடயம் சரியாகச் செய்யத் தெரியாவிட்டால் "எருமை மாடு எத்தனைதரம் சொல்லித் தந்தனான் சனியன்… சனியன் " என்று திட்டுவார்கள். இன்னும் சில பெற்றோர் பொது இடங்களில் வைத்தே பல்லை நெறுமிக்கொண்டே, "இண்டைக்கு வீட்ட வா உனக்கிருக்கு" என்று சொல்லும்போது வீடு செல்லும்வரைக்கும் அந்தப்பிள்ளை அதையே நினைச்சு நினைச்சு என்ன நடக்குமோ என்று பயந்து ஏங்க ஏங்க அந்தப்பிள்ளையின் சுயமதிப்பீடு குறைந்து கொண்டே போகும்.
ஆனால் பாடசாலையில் பிள்ளை ஒரு பிழை விட்டால் ஆறுதலாக பொறுமையாக விளங்கப்படுத்தி அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அவர்களாகவே தங்களுக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்து அந்தச் செயலை செய்ய வைத்து விட்டு, "பார்த்தாயா திரும்ப முயற்சி செய்தபோது  உன்னால் அந்தக் காரியத்தை எளிதாகச் செய்ய முடிந்ததல்லவா" என்று பாராட்டி ஒரு பேனாவைக் கொடுத்து அந்தப்பிள்ளையின் சுய மதிப்பீட்டை வளர்க்கிறார்கள். இது எல்லாப்பெற்றோரையும் குறை கூறி எல்லா ஆசிரியரையும் தலையில் தூக்கி வைக்கும் முயற்சியில்லை. ஆனால் பொதுவாகவே மாணவர்களிடம் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பள்ளியிருக்கிறது. ஆனால் பிள்ளைகளிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று பெற்றோருக்குச் சொல்லித்தர எந்தப்பள்ளியியும் இல்லை.
பிறந்த குழந்தைக்குக் கூட அம்மாவின் தொடுகையில் , பார்வையில் அன்பிருக்கிறதா, கோபம் இருக்கிறதா, கவலையிருக்கிறதா என்று இனம்காண முடியும். தன்னைச்சுற்றி நடக்கும் விடயங்களில் இருந்தே தன்னை வளர்த்துக்கொள்ளும். எனவே குழந்தையின் முன்னால் எப்போதும் சந்தோசமாகத் தென்படுங்கள். நான் நேசிக்கப்படுகிறேன் என்று அந்தக் குழந்தை உணரவேண்டும். உணர்தல் வேறு உணர்த்தப்படுதல் வேறு. குழந்தை தானாகவே உணரவேண்டும்.
இந்தக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது அக்காவின் மகன் விளையாட்டில் தோற்றுவிட்டதால் றிமோட்டை எறிந்துவிட்டு அழுதுகொண்டு ஓடி வந்து கதவைப் பூட்டிக்கொண்டான்.
esteem_thoughtஇப்போ, "நீ தோத்துவிட்டாய்  ந ந ந ந" என்று சின்னப்பிள்ளைகள் நெழிப்பது போலும் பழிக்கலாம். அல்லது “தோத்துப்போறதும் ஒருவிதமான பாடம் தான் நீங்கள் போனதடவை நல்லா விளையாடி வென்றனீங்கள்தானே என்று உற்சாகப்படுத்தித் திரும்ப விளையாட வைக்கலாம். விளையாட்டாக நெழித்துப் பழிக்கும்போதும் சுயமதிப்பீடு குறைக்கப்படும். ஆனால் முன்பு வென்றதை நினைவுபடுத்தி, உற்சாகப்படுத்தி மீண்டும் விளையாட வைக்கும்போது  அப்பிள்ளையின் சுயமதிப்பீடு அதிகரிக்கப்படும். ‘இதென்ன சாதாரணமான விளையாட்டுப் பற்றியது இதில் என்ன இருக்கு’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் குழந்தை வளர்ந்துவந்து வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் தோல்வி ஏற்படும்போது அதன் சுயமதிப்பீடு அவ்வளவாகப் பாதிக்கப்படாது; ஏனென்றால் அந்தப்பிள்ளைக்குத் தெரியும் தன்னால் இதிலிருந்து மீளமுடியுமென்று.

உயர்ந்த சுயமதிப்பீடு உள்ளவர்கள் எப்போதும்:
பிறரை மட்டுமே நம்பியிருக்கமாட்டார்கள்.
என்னால் முடியும் என்று பெருமையுடனும் சுதந்திரமாகவும் வாழ்வார்கள்.
பொறுப்புடன் கடமைகளைச் செய்வார்கள்.
எப்போதும் தேடலுடன் புதியவற்றைத் தேடிக்கற்றுக் கொள்வார்கள்.
மகிழ்ச்சியையும் சோகத்தையும் சரிசமமாக எதிர்கொள்வார்கள்.
கோபத்தையும் எரிச்சலையும் கையாளத் தெரிந்திருப்பார்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.

குறைந்த சுயமதிப்பீடு உள்ளவர்கள்:
புதிதாக எதையும் செய்யப் பயப்படுவார்கள்.
என்னை யாருக்கும் பிடிக்கவில்லை, நான் யாருக்கும் தேவையில்லை என்று எண்ணுவார்கள்.
தன் பிழைக்கும் மற்றவர்களையே குறை கூறுவார்கள்.
தன்னையும் தன் திறமைகளையும் குறைத்தே மதிப்பிடுவார்கள்.
கோபம், கவலை, மகிழ்ச்சி இப்படி எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டுவார்கள்.
சட்டென்று யாரையும் நம்புவார்கள். நம்பி அவர்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள்.

சுயமதிப்பீட்டை அதிகரிக்க என்ன செய்யலாம்?
இயலாமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து திறமைகளை அடையாளம் கண்டு அவற்றில் ஈடுபடல்.
பக்கத்திலிருப்பவர்களின் கருத்தை விட யாருக்கு சுயமதிப்பீடு அதிகரிக்க வேண்டுமோ அவர்களை மட்டும் கணக்கிலெடுத்தல்.
என்னைச் சுற்றியிருப்பவர்களால் நான் நானாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்று காட்டுதல்.
பிழை விடலாம், எல்லோரும் பிழை விட்டிருக்கிறார்கள் என்று தாங்கள் விட்ட பிழைகளையும் பகிர்ந்துகொள்ளல்.
தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது நான் உன்னிலும் பெரியவன் , நான் உன் சரி பிழைகளை அடையாளம் காணும் உயர்ந்த நிலையிலிருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளாமலிருத்தல்.
அந்நபரால் செய்து முடிக்கக்கூடிய சின்னச் சின்ன நோக்கங்களையும் , குறிக்கோள்களையும் நினைவூட்டல்.
குறிக்கோள்களைப் படிப்படியாகத்தான் அடைய முடியும் என்று நினைவூட்டல்.
எப்போதும் அந்நபரின் நேர் தன்மைகளை(Positiveness), திறமைகளைப் பற்றி உரையாடுதல்.
பிழை விட்ட காரியத்தை அடுத்த முறை எப்படி இன்னும் திறம்படச் செய்யலாம் என்று அந்நபரோடு சேர்ந்து கலந்துரையாடி நல்ல வழிகளைக் கண்டடைதல்.
முன்பு நடந்த விடயங்களில் இருந்து பட்டறிதல்.

உன்னையறிந்தால் – நீ
உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை
வணங்காமல் நீ வாழலாம்.

சிந்திக்கும் தொப்பிகள்

சிந்திக்கும் திறன் மனிதனுக்கு வாய்த்த செல்வங்களில் எல்லாம் தலையாயது. இந்தச் செல்வத்தின் அருமையை அறிந்த யாரும் தான் சிந்தனையின் எல்லையை அடைந்து விட்டதாக எண்ண மாட்டார்கள். பிறரை வாதத்தில் வெற்றி கொள்ள நினைப்பவர்கள் மட்டும் அவர்கள் வெற்றி பெறுகிற போது, தான் சிறப்பாகச் சிந்தித்து விட்டதாக கர்வம் கொள்வார்கள். இந்தமாதிரியான எண்ணம் ஒருவரிடம் இருக்குமேயானால் அவர் தன்னுடைய முழு சிந்தனைத் திறமையைப் பயன்படுத்தாது போகக்கூடும்.
இரண்டாவதாக, சிந்தனையைப் பாதிக்கும் மற்றொரு காரணி, நாம் சிந்திக்கும் போது செய்துகொள்ளும் குழப்பம் – உணர்ச்சிகள், தகவல்கள், தர்க்கங்கள், நம்பிக்கை மற்றும் புதியன புனையும் வேட்கை என்கிற கருவிகளை ஒன்று சேர்த்து, ஒரேசமயத்தில் பயன்படுத்துகிறோம். ஒரு மர வேலை செய்யும் தச்சர் ஒரே சமயத்தில் பல கருவிகளைப் பயன்படுத்தினால் அல்லது ஒருவர் ஒரே சமயத்தில் பல குதிரைகளிற் சவாரி செய்ய முயன்றால் எவ்வாறு இருக்கும்? அதே சமயத்தில் பயன் தரும் முடிவுகளை எடுக்கும் சிந்தனைக்கு இந்தத்திறமைகள் யாவும் தேவையானவையே. அவற்றைப் பயன்படுத்தவும் வேண்டும் குழப்பம் இல்லாமல் பயன்படுத்தத் தெரியவும் வேண்டும். ஏனெனில் சரியாகச் செய்யப்படும் சிந்தனைதான் களங்கம் இல்லாத முன்னேற்றத்தை – அது தனிமனித வாழ்க்கையாயினும் சரி அலுவலகமாயினும் சரி தரவல்லது.
ஆக, இரண்டு தீர்வுகள் தேவைப்படுகின்றன. ஒன்று ஈகோ இல்லாமல் மற்றவர்களோடு பேசவேண்டும். இரண்டு சிந்தனைக் கருவிகளை தேவையான அளவுக்குப் பயன்படுத்தவும் வேண்டும். ஒருவர் மற்றவருடன் கலந்து ஆலோசிக்கும் போதோ அல்லது கணவன் மனைவியிடம் பேசும் போதோ தான் (ஈகோவின் தூண்டுதலினால்) ஜெயித்தே தீர வேண்டும் என நினைத்தால் தம்முடைய எல்லாக் கருவிகளையும் பயன்படுத்த மாட்டார். எந்தக் கருவி வாகாக வருகிறதோ, அந்தக் கருவியை - உதாரணமாக, மனைவிக்குக் குற்ற உணர்வை (புதியன புனைதல்) ஏற்படுத்தி அல்லது அலுவலகத்தில் சக அலுவலருக்குத் தேவைப்படுகிற ஒத்துழைப்பைத் தராமல் ஜெயிக்கப் பார்ப்பார்.
ஈகோவை சுயமரியாதையாக மாற்றத் தெரியவேண்டும். பிறகு எல்லாக் கருவிகளையும் எவ்வாறு ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆறு சிந்திக்கும் தொப்பிகள் என்ற தன்னுடைய உத்தியைப் பயன்படுத்தி எட்வேர்டு டி போனோ என்ற உளவியலர் எவ்வாறு தர்க்கவாதத்தை உணர்ச்சிகளில் இருந்து பிரிப்பது அல்லது தகவல்களை புதியன புனைதலில் இருந்து பிரிப்பது அல்லது ஒரே சமயத்தில் இவற்றைப் பயன் படுத்தினாலும் ஒன்றன் பின் ஒன்றாக எவ்வாறு குழப்பம் இல்லாது நமக்குப் பெரிதும் பயன் தரும் வகையில் பயன்படுத்துவது, இவ்வாறு செய்யும்போது பெருமிதம்(ஈகோ) எவ்வாறு சுயமரியாதையாக மாறுகிறது என்று காட்டி உள்ளார்.

று ண்த் தொப்பிள்:
01வெள்ளைத்தொப்பி: வெண்மை நிறம் ஒரு சார்பு இல்லாத நிலையையும் எதையும் உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்வதையும் குறிக்கும். அதாவது உண்மை நிலவரங்கள், மற்றும் புள்ளி விவரங்கள் மட்டுமே இந்தத் தொப்பியின் குறிக்கோள்.
02சிவப்புத்தொப்பி: சினம், பெரும் சினம், பொறாமை,, உணர்ச்சிக் கொந்தளிப்பு மற்றும் உணர்ச்சிகளின் கோணத்தையும் அவை மனிதன் என்ன செய்ய வேண்டுகின்றன என்பதையும் குறிக்கும்
03கருப்புத்தொப்பி: நிதானம், ஜாக்கிரதை உணர்வு மற்றும் ஒரு கருத்தில் உள்ள பலவீனத்தைச் சுட்டிக் காட்டும்.
04மஞ்சள் தொப்பி: பிரகாசம், உற்சாகம், பரவசம், நம்பிக்கை மற்றும் ஃபாசிடிவ் சிந்தனையைக் காட்டும்.
05பச்சைத்தொப்பி: பச்சை நிறம் ஆக்கத்தை,  செல்வத்தை, எல்லையில்லாத் தன்மையை மற்றும் பெரும் பேறுகளைக் குறிக்கும்.
06நீலத்தொப்பி: நீலம் குளிர்ச்சி மற்றும் பதட்டமின்மையைக் குறிக்கும். தன்னிலிருந்து வெளிப்பட்டு வெளியேயிருந்து தன்னைக் கூர்ந்து நோக்கி ஒழுங்குபடுத்த, கட்டுப்படுத்த உதவுகிற சிந்தனையைக் குறிக்கும்
தொப்பிகளை எவ்வாறு பயன்படுத்துவது?
இக்கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்னர் தொப்பிகளைப் பயன்படுத்தத் தேவைப்படும் சிந்திக்கும் முறையைப் பற்றி சில வார்த்தைகள்.
இயைந்த சிந்தனை: (Parallel thought)
உங்கள் துணைவி உங்கள் தாயினைப் பற்றி உங்களிடம் புகார் கூறுவதாகக் கொள்வோம். அவர் பேசும்போது அவர் கூறும் தகவல்களை மறுத்து மறுத்து உங்கள் மனதிற்குள்ளே நீங்களும் பேசுவீர்களா? அல்லது அவர் கூறுயதைப் போன்ற உங்களுக்குத் தெரிந்த பிற தகவல்கள் உங்கள் நினைவுக்கு வருமா? நினைவுக்கு வந்தால் நீங்கள் இயைந்த சிந்தனை செய்கிறீர்கள் என்று பொருள். அவ்வாறு இல்லாது தகவல்களை மறுத்தாலோ அல்லது தகவல்களுக்கு விளக்கம் அளித்தாலோ நீங்கள் வாதம், எதிர்வாதம் அல்லது அவர் கூறுவதைப் பற்றி கேள்வி எழுப்புவது போன்ற சிந்தனையில் உள்ளீர்கள் என்று பொருள்.
இயைந்த சிந்தனை ஏன் வேண்டும்?
உண்மைக்குப் பல முகங்கள். எல்லோர் சொல்வதிலும் ஏதாவது ஓர் உண்மை அல்லது ஓர் உண்மைத் தகவலாவது இருக்கும். அந்த உண்மை அல்லது தகவல் சரியான களங்கம் இல்லாத முடிவு எடுப்பதற்குப் பயன்படக்கூடும். ஒருவர் பேசும்போது மற்றவரும் அதேபாதையில் பயணித்தால் முதலில் பேசுபவரின் ஈகோவுக்கு மிரட்டல்(threat) இல்லை. அவர் அந்த நிலையில் சரளமாக மடைதிறந்த வெள்ளம் போல் பேசுவார். உதாரணமாக பலபேர் ஓர் அலுவலகத்தில் மார்க்கட்டிங் ஸ்ட்ரேட்டஜி பற்றிப் பேசுவதாக வைத்துக் கொள்வோம். அந்தக் கூட்டத்தின் தலைவர் முதலில் பேசுபவர் கருத்தை ஒட்டித் தானும் தனக்கு தெரிந்த தன்னுடய அனுபவத்தைக் கூறினாரேயானால் பேசுபவர் மேலும் மேலும் உற்சாகமாகத் தகவல்களைத் தருவார். இவ்வாறே எல்லோரும் இயைந்த சிந்தனை செய்து அவரவர் அனுபவத்தைக் கூற அங்கே ஒரு கருத்துக் களஞ்சியமே உருவாகிவிடும்.
Parallel thinking என்ற ஆங்கிலத் தொடரின் பொருளைப் புரியும் படி சொல்லி விட்டேன் என்று நம்பி அதற்கு தமிழ்ப் பெயர் இடலாம் என நினைக்கிறேன்.
ஓரு குறள் நினைவுக்கு வருகிறது.
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை
உடைத்தாம் இவ்வுலகு.

தன்னுடன் வேலை செய்பவர்கள் பிரச்சனையை அவர்கள் பார்வையிலேயே பார்த்து, அவர்களுக்கு வேண்டியதை, எடுத்துக் கொண்டு காரியம் கெடாமல் செய்யும் திறமை உள்ளவர்களுக்கு, யாருடன் கண்ணோடினார்களோ, அவர்களுடைய நேரத்தின் மீதும் உழைப்பின் மீதும் உரிமை உண்டாகும்.
கண்ணோட்டச் சிந்தனை என்ற சொற்றொடர் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
ஒரு பிரச்சனையைப் பற்றி சிந்திக்கும் போது மற்றவர்களோடு கண்ணும் ஒடிக்கொண்டு எவ்வாறு களங்கமில்லாத முடிவினை எடுப்பது? இங்கேதான் வருகின்றன சிந்தனைத் தொப்பிகள்.
வெள்ளைத் தொப்பிச் சிந்தனை:
ஓர் ஆய்வகத்தில் இரத்தப் பரிசோதனை செய்யும் ஒருவர் எவ்வாறு விருப்பு வெறுப்பு இன்றி புள்ளி விவரங்களைச் சேகரிப்பாரோ அதைப்போல செயற்படுதல் வெள்ளைத் தொப்பிச் சிந்தனை. சாதாரணமாக அலுவலகங்களிலோ அல்லது இல்லங்களிலோ இவ்வாறு செயல்படுவது இயலாது. வாழ்க்கை இயந்திர மயமாகிவிடும். உண்மை என்று நம்புவதை வைத்துச் செயற்படுகிறோம். பெரும் பாதிப்பு ஏற்படுவது இல்லை.
ஆனால் ஒரு பிரச்சனை என்று வரும்போது நம்முடைய உண்மைகளைச் சோதிக்கத் தயங்கக் கூடாது. நம்பப்படும் உண்மைகள், சரி பார்க்கப்பட்ட உண்மைகள் என்று இரண்டு உண்மைகள் உண்டு என்பதை நாம் உணர்ந்தோமானால் இது சாத்தியமே.நம்பப்படும் உண்மைகளை சரி பார்க்கப்பட்ட உண்மைகளாக மாற்றுவதுதான் வெள்ளைச் சிந்தனையாகும்.
உதாரணமாக ஆலோசனைக் கூட்டத்தில்: “இதுவரை எல்லோரும் உங்களுடைய கருத்துக்களைக் கூறினீர்கள். இப்போது நாம் பேசிய சிலவற்றின் உண்மைகளைக் கண்டறிவோம். திருவாளர் நடேசன் நம்முடைய போட்டி நிறுவனத்தின் ப்ராடக்ட் நம்மை விட அதிகமாக விற்பனையாவதற்குக் காரணம் அவர்கள் சிறிய பேக்கிங் வைத்து உள்ளனர். நம்முடைய பேக்கிங்கில் சிறிய பேக் இல்லை. எல்லோராலும் வாங்க முடியவில்லை என்கிறார். இப்போது எல்லோரும் வெள்ளைத் தொப்பி அணிந்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.”
வெள்ளைத் தொப்பிச் சிந்தனை என்பது அறுதியான உண்மையைக் கண்டறிவதன்று. அது இயலாத ஒன்று. எத்தனை நிலவரங்கள் இதைப் பற்றி இங்கு உள்ளவர்களுக்குத் தெரியும் என்பதுதான் பொருள். வெள்ளைத் தொப்பிச் சிந்தனையினால் எல்லா சமயங்களிலும் இது சரி என்பதிலிருந்து தொடங்கி ஒருபோதும் இல்லை என்பதுவரை இடையே பெரும்பாலும், சிலநேரங்களில் மட்டும் என்ற விடைகள் கிடைக்கலாம்.
சிவப்புத் தொப்பி:
பொதுவாக நிர்வாகத்தில் அல்லது இல்லத்தில் உணைச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். பிசினஸ் டிஸ்கஷனில் உணர்ச்சிகளுக்கு இடமே இல்லை எனவும் நினைக்கிறார்கள். உண்மையில் உணர்ச்சிகள் தர்க்கம் (logic) என்ற போர்வையில் வெளிப்படுகிறது.
சிவப்புத் தொப்பி அடிவயிற்றிலிருந்து ஏதோ உணர்ச்சி (gut feeling) அல்லது உள்ளுணர்வு (intuition) போன்ற உணர்வுகளையும் பொறாமை, ஏமாற்றம் போன்ற பிற உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்குச் சங்கடமில்லாத வழியாகும். எல்லொரும் சிவப்புத் தொப்பி அணிந்து பேசப்பழகி விட்டால் முடிவுகளில் உணர்ச்சிகளுக்கு ஓர் அங்கிகரிக்கப்பட்ட ஸ்தானம் கிடைத்துவிடும். உணர்ச்சிகள் ஒருவரைக் கொண்டு செலுத்தும் சக்தியாகும். உணர்ச்சிகள் நம்முடைய கனவுகளையும் நெறிகளையும் சக்திப்படுத்துபவை. ஆகவே அவற்றைப் பரஸ்பரம் அங்கீகரித்தலும் பரிகாரம் தேடுதலும் அவசியம். மருந்து இடுதலும் அவசியம்.
என்னுடைய பயனாளர் ஒருவர் தன்னுடைய குழந்தை மிகவும் அழுது அடம் பிடிக்கிறான் என்ன செய்வது எனக்கேட்டார். அவருடய குழந்தைக்கு ஆறு தொப்பி வைத்தியம் செய்தோம். நான் அக்குழந்தைக்குப் பயிற்சி அளித்தேன். நீண்ட நேரம் அழுது ஆர்பாட்டம் செய்யும்போது நீ சிவப்பு தொப்பியிலேயே எவ்வளவு நேரம் இருக்கப்போகிறாய் எனக்கேட்டால் உடனே அவன் அழுகையை நிறுத்தி விடுவான்.
கருப்புத் தொப்பி
தொப்பிகளில் அதிகப் பயன்தருவதும் முக்கியமானதும் கருப்புத் தொப்பி எனலாம். ’விழிப்புணர்ச்சி’, ’எச்சரிக்கை’, ’ஜாக்கிரதை’ – இவை கருப்புத் தொப்பியின் அடையாளங்கள். சிந்தனை செப்பமாகச் செல்ல வேண்டுமெனில் கருப்புத் தொப்பி மனநிலை அவசியம். மற்றத் தொப்பிகளுக்கு இல்லாத ஒரு விஷேசம் கருப்புத் தொப்பிக்கு உண்டு. கருப்புத் தொப்பிக்கு நம் நரம்பு மண்டலத்திலேயே ஒரு உதவித்தளம் இருக்கிறது எனலாம். பரிணாம வளர்ச்சிக் காலத்தில் எதிரிகளிடமிருந்து இரவு பகல் என்று இல்லாமல் எந்த நேரமும் தன்னைக் காத்திட வேண்டி இருந்த மனிதனுக்குத் தேவையான ஜாக்கிரதை உணர்வுக்கு வேண்டிய ’கமேண்ட் சிஸ்டம்’ நரம்பு மண்டலத்தில் அமையப்பெற்றது. இந்த சிஸ்டம் இன்றளவும் எல்லா உயிரினங்களிலும் செயற்படுகிறது. உதாரணமாக சாலையில் பின்புறமிருந்து வரும் வண்டியைக்கூட கண நேரத்தில் உணர்ந்து நாம் விலகி ஓடுகிறோம் அல்லவா?
ஆகவே மனிதனுக்குக் கருப்புச் சிந்தனை இயல்பாக வரக்கூடிய ஒன்று. சிறிது பயிற்சி மட்டும் தேவை.
பல வகைகளில் இச்சிந்தனை பயன்பட்டாலும் அலுவலகத்திலும் இல்லத்திலும் இதற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. முடிவுகளைச் செயற்படுத்தும் போது எழுப்பட வேண்டிய கேள்விகள் பல. உதாரணமாக
  • o இந்த நடவடிக்கையை எடுத்தால் என்ன விளைவு ஏற்படும்?
  • o அவ்விளைவு ஏற்கத்தக்கது தானா?
  • o அதற்குத் தேவையான பொருள் மற்றும் பிற ஆதாரங்கள் உள்ளனவா?
இக் கேள்விகளுக்குப் பதில்காண வேண்டுமெனில் கருப்புச்சிந்தனை மட்டுமே தேவை. சிவப்புச் சிந்தனை கூடவே கூடாது என்பது எளிதில் விளங்கும்.
மஞ்சள் தொப்பி:
மஞ்சள் தொப்பியோடு இணைத்துக் கொள்ள வேண்டிய மனப்பக்குவம் சாதக நம்பிக்கை(optimistic). இந்தவகைச் சிந்தனையினால் மஞ்சள் தொப்பி அணிபவர் தங்கு தடையில்லாமல் எல்லாவித சாத்தியக் கூறுகளையும் சிந்தனை செய்வார். வணிக உலகத்தின் தொலை நோக்க ஆதாயங்கள் (projection), விஞ்ஞானிகளின் எதிர்காலகணிப்புச் (futuristic) சிந்தனை ஆகியன இவ்வகையைச் சார்ந்தவைதாம்.
இச் சிந்தனையுடன் மதிப்பீடு (valuing) செய்யும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஸ்டெம் செல் ஆய்வு செய்யலாமா கூடாதா என்ற கேள்விக்கு-  செய்யலாம் என்போரும், மத அடிப்படையில் செய்யக்கூடாது என்போரும், இயற்கைக்கு மாறாக செயற்படக்கூடாது என்போரும் உள்ள நிலையில் அவ்வாய்வின் பயனை மதிப்பீடு செய்யும் திறன் மிகுந்தோருடைய சேவை எவ்வளவு தேவைப்படுகிறது என்பது சொல்லாமலேயே விளங்கும்.
கருப்புத் தொப்பி பாதகங்களைக் கூர்ந்து நோக்கும் பார்வை எனில் மஞ்சள் தொப்பி சாதகங்களைக் கூர்ந்து நோக்கும் பார்வை எனலாம்.
பச்சைத் தொப்பி:
”அவர் ஆள் எப்படி?”
என்ற கேள்விக்கு
”உற்சாகத்தின் ஊற்றுக்கண்”
”மிக மிக ஆக்கத்திறன் மிக்கவர்”
என்ற பதில் வருமேயானால் அவர் பச்சைத் தொப்பி ஆர்வலர் எனலாம்
இப்போது எல்லோரும் பச்சைத் தொப்பி அணிந்து கொள்ளுங்கள் என்று குழுத் தலைவர் கூறினால் அவர் தம்முடைய குழுவை உற்சாகமாகவும், சக்தியுடனும் சிந்திக்க வேண்டுகிறார் என்று பொருள். இரண்டு அம்சங்களை இங்குக் கவனிக்க வேண்டும். ஒன்று அலுவலகங்களில் விவாதங்கள் நடக்கும்போது பச்சைத் தொப்பிக்கு எனத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். அதேபோல் குறித்த நேரத்தில் சிந்தனையின் முடிவை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கவும் வேண்டும். இல்லை என்றால் விவாதம் முடிவில்லாத விவாத மேடை ஆகி விடும்.
பச்சைத் தொப்பிக்கு மற்றும் ஒரு பயன்பாடும் உண்டு. பச்சைத் தொப்பியின் கீழ் சாத்தியப் படக்கூடியவையும் (possibilities) அனுமதிக்கப் படுகின்றன. சாத்தியப்படக் கூடியவைகளில் இருந்து ஆய்வுக் கொள்கைகள் பிறக்கின்றன. கொள்கைகளிலிருந்து ஆய்வுகளும் ஆய்வுகளிலிருந்து விடைகளும் விடைகளிருந்து திட்டங்களும் பிறக்கின்றன. ஆகையினால் இந்தவகைச் சிந்தனையில்லாமல் முன்னேற்றம் இல்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனர்களின் தொழில் நுட்பம் மேற்கத்திய நாடுகளை விட மிகவும் முன்னேறி இருந்தது. பிறகு அது நின்று போனது. இதற்குக் கூறப்படும் காரணம்: சீனர்கள் ஆய்வுக் கொள்கைகளை உருவாக்கவில்லை என்பதே.
நீலத் தொப்பி:
நீலத் தொப்பி மற்றத் தொப்பிகளின் ஒருங்கிணைப்பாளர். மற்றத் தொப்பிகளின் சிந்தனையைப் பற்றிச் சிந்திக்கும் சிந்தனையாளர். ஓர் இசைநிகழ்ச்சியை நடத்துபவர், யார் எந்த இசைக்கருவியை எப்போது இயக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயற்படுத்துவதைப் போல் நீலத் தொப்பி செயற்படுகிறது.
ஓர் ஆலோசனைக் கூட்டத்தின் தொடக்கத்தில் நீலத்தொப்பி கூட்டத்தின் விசயங்களைத் தீர்மானிக்கிறது; பின்புலத்தைக்(arisingsituation) கூறுகிறது; கூட்டத்தை நடத்தும்போது உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்ட தொப்பியைத் தவிர வேறு தொப்பியைப் பயன்படுத்தினால் அனுமதி மறுக்கிறது; கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாகத் தயார் செய்கிறது.
நீலத் தொப்பி பெரும்பாலும் தலைவர் அணிய வேண்டிய ஒன்று என்பதைக் கவனித்து இருப்பீர்கள். ஆனால் சில வேளைகளில் பிற உறுப்பினர்களும் அணியலாம். உதாரணமாக எந்த ஒரு கட்டத்திலும் உறுப்பினர் ஒருவர் கூட்ட நடைமுறை சம்பந்தமாகத் தேவைப்படும் மாறுதல்களைக் கூறும்போது நீலத் தொப்பியை அணியலாம்.
முடிவுரை:
ஆறு தொப்பிகள் உத்தி மிகமிக எளிமையான ஒன்று. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ஒன்றுமில்லாததைப் பெரிதுபடுத்திப் பேசுவது போலவும் தோன்றும். அலுவலகங்களில், வீடுகளில் நம்மை அறியாமலேயே நாம் இவ்வாறு தான் நடந்து கொள்கிறோம் என்றெல்லாம் நினைக்கத் தோன்றும்.
சிலபேர் விசயத்தில் இந்த அனுமானம் ஒரளவு சரியாக இருக்கக்கூடும். அவர்கள் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற பழமொழியை அறிந்தவர்கள் மட்டுமல்ல, அதைச் செயற்படுத்துபவர்களுமாவர். தீர விசாரிப்பதற்கு மனிதர்கள் தங்களுடைய பெருமிதம்–மனம்–உடல் (ego-mind-instinct) என்ற அச்சிலிருந்து விடுபடவேண்டும். அவ்வாறு விடுபடுவது என்பது சரியான பயிற்சி இருந்தாலொழிய இயலாது. தொப்பிகளை அணியும்போது அந்தந்தத் தொப்பிக்குத் தக்கவாறு நாம் பாத்திரமேற்று (role play) சிந்திப்பதால் அவ்வச்சிலிருந்து நம்மையும் அறியாமல் விடுபட்டுச் சிந்திக்க முடியும்.

யோகா கலை !

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்கத்தைய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்கப்படுகிறது. லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள். சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்.

ஆனால் இந்தக்கலையைக் கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.

யாருக்கு பயன் ?

இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணிநேரம் செலவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கு முடிவதற்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், அத்தை மகன், பெரியம்மா பையன், நீண்டகால நண்பர், எதிர்த்த வீட்டுத் தோழர், வீட்டு வாடகை, பஞ்சர் ஆன பைக், பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, டிக்கெட் புக்கிங், தெருவிளக்கு எரியாதது, சாலை சரியில்லாதது, காப்புறுதி, கடன் அட்டை காலக்கெடு தவறியது, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைபடுகிறார் நமது மனது என்னும் அபாக்கியசாலி.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது.

இதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம். நாட்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எப்போதும் வேலையைச் சிந்தித்து அதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய நோய்களுள்ள அனைவரும் பயன் அடையலாம். வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்.

யோகாவின் வகைகள் - கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா ?

உட்கார்ந்து எழுந்து, கையைக் காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா. கீழே சற்று விரிவாக வகைப்படுத்தியுள்ளேன்..

யாமா (விதிகள் / வரையறைகள்)
நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
ப்ராணாயமா (மூச்சுப்பயிற்சி)
ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
தியானா (தியானம்)
சாமாதி (தீர்வு)

இதில் குறிப்பிட்ட யோகாவை எடுத்துக்கொண்டால் அதில்

பக்தி யோகா
கர்ம யோகா
பதஞ்சலி யோகா முறை
ஜனன யோகா
ஹத்த யோகா
குண்டலினி யோகா
என்று பிரிவுகள் உண்டு...

ஒவ்வொன்றையும் விளக்கி வாசகர்களைத் துயிலில் ஆழ்த்த நான் விரும்பவில்லை எனினும், யோகா சிறந்ததொரு முறை என்பதும், அதில் நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவு - மனத்துக்கு பயனளிக்கும் வகையில் செறிந்துள்ளது என்பதையும் ஆழமாகப் பதிக்க விரும்புகிறேன்.




கர்ப்பிணிப் பெண்ணொருவர் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி.



யோகா மேற்கத்திய நாடுகளில் சிறப்பான முறையில் சந்தைப்படுத்தப்படும் காட்சிகள்.



இருவர் இணைந்து செய்யும் பயிற்சி முறைகளும் உண்டு.




மேலேயுள்ள படத்தில் பாருங்கள். இது போன்ற கடினமான ஆசனப்பயிற்சி தான் யோகா என்று இல்லை. மென்மையாக, உடலுக்கு எந்த விதமான துன்பத்தையும் தராத சிறந்த பயிற்சிகள் உண்டு.




யோகா ஆசிரியர் ( கவனியுங்கள் - இந்தியர் அல்லர் ) ஒருவர் தன்னுடைய மாணாக்கரைப் பழக்கும் காட்சி.


ஏதாவது புத்தகத்தை வாங்கி யோகா படித்துக்கொள்ளலாம் என்று மணிமேகலைப்பிரசுரத்தின் குண்டலினி யோகம் புத்தகத்தையோ அல்லது இணையத்தில் கிடைக்கும் தகவல்களையோ வைத்துப் பழகுவது முழுமையான பலன் தராது. ஒரு சிறந்த யோகா அறிஞரிடம் பழகுவது சிறந்த பலன் அளிக்கும்.




சக்கரம்,வட்டம் என்று புரியாத விடயங்களைச் சொல்லி பணம் பறிக்கும் கூட்டமும் உண்டு. யோகா என்ற பெயரில் குனிந்து நிமிரவைத்து பணத்தைப் பறித்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள். அதனால் நல்ல தரமான ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது முதற்படியாக இருக்கட்டும்.
வெளிநாடுவாழ் இந்திய நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவர் சொன்னார், பேசாமல் யோகா கற்றுக்கொடுக்கும் தொழிலில் இறங்கப்போவதாக. நான் அவரிடம் வினவியது, நண்பரே உமக்குத்தான் யோகா தெரியாதே, எனக்குத் தெரிந்து நீர் எந்தப் பயிற்சிக்கும் சென்றதில்லையே என்று. அவரின் பதில் என்ன தெரியுமா?
"இணையம் எதற்கு இருக்கிறது?" என்பதே. அதனால் தாங்களிருக்கும் நகரில் யோகா கலையைக் கற்றுக்கொடுக்க விரும்புபவர்கள் முறையாகப் பயின்று பிறகு தொடங்க வேண்டும். சென்னையில் கூட யோகாவை தொழிலாக ஏற்க நண்பர்கள் முன்வரவேண்டும். எங்கள் நிறுவனத்தில் யோகாப் பயிற்சியாளரின் சம்பளம் (50 மாணவர்கள் - தலா இரண்டாயிரம் மாதம்) - ஒரு லட்சம் ரூபாய். அவர் எங்கள் நிறுவனம் போல பத்து நிறுவனங்களில் செயற்படுகிறார். ஆக யோகா கலை வெறும் கலை மட்டும் அன்று, உபயோகமாகவும் செயற்படுத்தும் முறை உள்ளது. இந்திய அளவில் மாறிவரும் சூழலை யோகாவுக்கும் உங்களுக்கும் சாதகமாகப் பயன்படுத்த தயாரா வாசகர்களே?